Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


ககன்யான் திட்டம்:


இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது.  இந்தியாவின் 40 ஆண்டுகால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. அதாவது, விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் தன் முதல் ஏவுகணையான ககன்யானை அடுத்து ஆண்டு செலுத்த உள்ளது. 


ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது.  ககன்யான் திட்டத்தின் மூலம் 400 கி.மீ. சுற்றுப்பாதைக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இந்த பணியின் இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற பெண் மனித ரோபோவை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


 சோதனை ஓட்டம்:


இந்த திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு சோதனை நடைபெறும். இரண்டு கட்டங்களான நடக்கும் சோதனையில், முதல் கட்டத்திற்காக தற்போது இஸ்ரோ தயாராகிவிட்டது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத்  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். விண்வெளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தின் சோதனை தொடங்க உள்ளது. விண்வெளிக்கு சென்ற பின்னர் வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்கவதற்காக பிரத்யேகமாக க்ரூ மாட்யூல்  (Crew Model) என்ற கருவி உருவாக்கப்பட்டது   இதனை தான் சோதித்து பார்க்க இருப்பதாக” தெரிவித்தார். 


எப்படி தரையிறங்கும்?


இந்த சோதனையில் வியோமா மித்ரா என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவலை அனுப்பும். மேலும், இந்த சோதனையில், டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது, ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லா க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு சென்று, 17 கி.மீ உயரத்தில் இருந்து கீழே விழும். அப்போது, ஒரு சிறிது தூரம் கீழே க்ரூ மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக தரையில் இறங்கும். கடலில் இருந்து 10 கி.மீ தொலைவில் பத்திரமாக தரையிறங்கும். பின்னர், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் இந்த மாட்யூல் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.