தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த நகர்வாக மும்பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடல் வழியாக ரயில் விட திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத இந்த திட்டம் ஒருவேளை எதிர்காலத்தில் சாத்தியப்படவும் வாய்ப்புள்ளது.
காலம் ஓடும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பல மடங்கு வேகமாக அதிகரித்து விட்டது. இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் மெட்ரோ, மோனோ ரயில் சேவை வந்து விட்டது. அனைத்து நகரங்களையும் இணைக்கும் வகையில் விமான சேவையும் தொடங்கப்பட்டு விட்டது. இப்படியான மக்களின் அடிப்படை வசதியை உயர்த்தும் பல விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சூப்பர் சோனிக் ரயில்
இந்த நிலையில் இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ரயில் சேவை அளிக்கும் ஒரு திட்டமானது முன்மொழியப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நீருக்கடியில் செல்லும் இந்த சூப்பர் சோனிக் ரயில் எவ்வாறு பொறியியல் தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு சாத்தியப்படுத்தப்படுகிறது என்ற ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த டீப் ஃப்ளூ எக்ஸ்பிரஸானது அரபிக்கடல் வழியாக இணைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மணிக்கு 600 கிலோ மீட்டர் முதல் 1000 கிலோ மீட்டர் வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. இது விமானம் செல்லும் வேகத்தை விட அதிகமாகும். இந்த ரயிலில் பயணிப்பவர்கள் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்வார்கள். இது நிச்சயம் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதில் பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்த கடலுக்கடியில் செல்லும் ரயில் பாதையின் பக்கவாட்டு சுவர்களில் ஜன்னல்கள் இருக்கும் என்றூம், அரபிக்கடலுக்கு அடியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் பயணிகள் செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் சுறாக்கள், திமிங்கலம், மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த வித பாதிப்பும் நிகழாதபடி இந்த திட்டம் செயல்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது ரயில் பயணத்திற்கு மட்டுமல்லாது, இது துபாயிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெயையும், இந்தியாவிலிருந்து துபாய்க்கு நன்னீரையும் கொண்டு செல்லும் வகையில் ஒரே நேரத்தில் 2 பிரச்னைகளை தீர்க்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் காலை உணவை மும்பையிலும் , மதிய உணவை துபாயிலும் சாப்பிட முடியும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த திட்டம் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நேஷனல் அட்வைஸர் பியூரோ லிமிடெட் நிறுவனம் தான் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் பயணச் செலவுகளை கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.