Continues below advertisement

உத்தரபிரதேசத்திலிருந்து சண்டிகருக்கு வேலை தேடி வந்த ஒருவர், தனது குடும்பத்தினரிடமிருந்து பணம் பறிக்க ஒரு பொய்யான கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அந்த நபர் தனது மனைவிக்கு போன் செய்து, தான் கடத்தப்பட்டதாகக் கூறி, ரூ.50,000 கொடுக்காவிட்டால் கடத்தல்காரர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று எச்சரித்தார். இந்த தகவலின் பேரில், உத்தரபிரதேச காவல்துறை சண்டிகர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து, சில மணி நேரங்களுக்குள் அந்த நபரைக் கண்டுபிடித்து, அவரின் நாடக்கத்தை அம்பலப்படுத்தியது.

நடந்தது என்ன?

சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரைச் சேர்ந்த ராம்வ்ரிக்ஷ் யாதவ் என்ற அந்த நபர், தனது மனைவி சந்தோஷிக்கு போன் செய்து, மனம் உடைந்து, தன்னை கடத்தி, அடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்ததாகக் கூறினார். பணம் அனுப்பாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி, ரூ.50,000 கேட்டு, பின்னர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டார். பதறிப்போன சந்தோஷி, குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தார், அவர்கள் இரவில் தாமதமாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று இந்த விஷயத்தை தெரிவித்தனர்.

Continues below advertisement

போலீஸையே ஏமாற்ற நினைத்த நபர்

உத்தரபிரதேச காவல்துறை உடனடியாக சண்டிகர் காவல்துறைக்கு தகவல் அளித்தது. ரகசிய தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் அழைப்பாளரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சிறிது நேரத்திலேயே அவரைக் கண்டுபிடித்தனர். காவலில் எடுக்கப்பட்ட ராம்வ்ரிக்ஷ், ஆரம்பத்தில் காவலர்களை தவறாக வழிநடத்த முயன்றார். தான் கடத்தப்பட்டு மயிரிழையில் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

ஆனால், போலீசார் இவர் மீது சந்தேகமடைந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு, எந்த கடத்தலும் நடக்கவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டார். பணத்தேவை காரணமாக, தனது மனைவி மற்றும் உறவினர்களிடமிருந்து ரூ.50,000 பறிக்கும் நோக்கில் இந்த நாடகத்தை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் உண்மையை குடும்பத்தினரிடம் தெரிவித்து, ராம்வ்ரிக்‌ஷை அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர் வேலைக்காக சண்டிகருக்குச் சென்றதாகவும், முன்பு ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை கிடைத்ததாகக் கூறியதாகவும், ஆனால் நிறுவனத்தின் பெயரை அவர் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்தார்.