தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழைதான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.  இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான்.


தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலக்கட்டத்தில் கோடை மழை பெய்து உஷ்ணத்தை தணித்துள்ளது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மாதத்தில் வெயில் மண்டையை பிளக்கும் அளவு இருந்தது. ஒரு சில மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட வரை வெப்பநிலை பதிவானது.


இது போன்ற சூழலில் மே 31 ஆம் தேதி தென் மேற்கு பருவ மழை கேரளா மாநிலத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.   வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். கடந்த ஆண்டு தாமதமாக ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே அதாவது மே 31ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டு சராசரி அளவு பெய்தது.


தமிழ்நாட்டில் இன்று அநேக  இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள்   மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சென்னையில் நேற்று முதல் அவ்வப்போது விட்டுவிட்டு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மடிப்பாக்கம், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளி பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.