மனிதகுலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதில் தொலைத்தொடர்பின் பங்கு இன்றியமையாதது. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களை மற்றொரு பகுதியில் தொடர்பு கொள்ளவே முடியாத சூழல் இருந்து வந்த நிலையில், இன்றைய காலத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் எவரும் தொடர்பு கொள்ள முடியும் என்றே சூழலை உருவாக்கியிருப்பதே இந்த தொலைத் தொடர்பின் மிகப்பெரிய சாதனை ஆகும்.


தகவல் தொலைத் தொடர்பு தினம்:


சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டதை கொண்டாடும் வகையில் தொலைத் தொடர்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1969ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மே மாதம் 17ம் தேதி சர்வதேச தொலைத் தொடர்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை கொண்டாடுவதற்கான தீர்மானம் 1973ம் ஆண்டு நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்டது.


மன்னர் காலத்தில் புறாக்கள், பறவைகள், ஒற்றர்கள் மூலமாக தூது விடுக்கப்பட்டு தகவல் பரிமாறப்பட்டு இருந்தது பின்னர் கடிதம், தந்தி, தொலைபேசி என மாறியது. 2000க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் அவசர செய்திக்கு தந்தியே பயன்படுத்தப்பட்டது. இந்த தகவல் பரிமாற்ற சேவை தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன் அடுத்தகட்டத்திற்குச் சென்றது. பேஜர் வடிவத்திற்கு வந்த தகவல் பரிமாற்ற சேவை, செல்போன் வடிவத்தை அடைந்த பிறகு தகவல் தொடர்பு சேவை தொடர்ந்து உச்சத்திற்கு சென்றது.


செல்போன் வடிவத்திற்கு செல்வதற்கு முன்பே வானொலி, தொலைக்காட்சி என்று சாமானியர்களின் வீடுகளுக்கும் சென்று அத்தியாவசிய பொருட்களாக மாறி தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் பலம் சேர்த்தது. 


பலம் சேர்த்த இணையதள வளர்ச்சி:


செல்போன்கள் ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய தேவையாக மாறிய பிறகு, செல்போன்கள் மூலமாக எங்கிருந்தும், எங்கிருப்பவர்களுடன் பேசிக் கொள்ள முடியும் என்ற சூழல் வந்த பிறகு உலகம் மற்றொரு பரிணாமத்திற்கு சென்றது என்றே கூற வேண்டும். செல்போன்களில் இருந்து வந்த குறுஞ்செய்தி வடிவமானது 2ஜி, 3ஜி, 4ஜி, 5 ஜி என்று புதுப்புது அவதாரம் எடுத்த பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளும் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் வீடியோ கால் மூலம் பார்த்து பேசும் அளவிற்கு வசதியை நமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.


இவை மட்டுமின்றி இன்று உலகின் பல முன்னணி நிறுவனங்களும், கோடிக்கணக்கான மக்களும் இந்த தொலைத் தொடர்பு சேவையை மூலதனமாக கொண்டு இயங்குவதை கொண்டே நம்பியுள்ளனர். இந்த அபார வளர்ச்சி காரணமாகவும், தொலைத் தொடர்பு அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் என்பதையும் அறிந்த ஐ.நா. கடந்த 2005ம் ஆண்டே வெறும் தொலைத் தொடர்பு தினமாக கொண்டாடப்பட்டு வந்த மே 17ம் தேதி, உலக தகவல் சமூக தினமாக அறிவிக்குமாறு பரிந்துரைத்தது.


இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி தொலைத் தொடர்பு தினமாகவும், உலக தகவல் சமூக தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய வளர்ச்சியுடன் கூடிய தொலைத் தொடர்பு வளர்ச்சி மூலமாக இன்று மனிதகுலத்தின் வளர்ச்சி மிகப்பெரிய இடத்தை எட்டியுள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தினந்தோறும் வீடியோ கால் மூலமாக தங்களது குடும்பத்தினரை பார்ப்பதற்கும் இந்த தொலைத் தொடர்பு வளர்ச்சி முக்கிய பங்காக உள்ளது. தொலைத் தொடர்பு வளர்ச்சியை பயன்படுத்தி சில சட்டவிரோத செயல்களில் சில மோசடி பேர்வழிகள் ஈடுபட்டு வந்தாலும், அதைத் தடுக்க அரசு சார்பில் சைபர் தடுப்பு பிரிவினரும் மும்முராக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சாமானிய மக்களின் பயன்பாடு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களிலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தகவல் பரிமாற்ற சேவை அடுத்தடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.