நம் நாட்டு சமையலில் மிக முக்கிய பங்கு வகிப்பது தக்காளி. ஜூன் மாதம் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தக்காளி உட்பட பிற காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விலை கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் உள்ளது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் பல மாநிலங்களில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.




2 ஏக்கர் தக்காளி நாசம்: 


நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக பல மாநிலங்களில் தக்காளி திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சாம்ராஜ் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளியை மர்ம நபர்கள் நாசமாக்கியுள்ளனர்.  சாம்ராஜ்நகர் தாலுகா கெப்பேபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மஞ்சு. மஞ்சுவிற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு இருந்தார். தக்காளி நன்றாக விளைந்து இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக இருந்தது. தற்போது தக்காளி விலை உச்சத்தில் இருப்பதால் சந்தையில் தக்காளி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணத்தில் மஞ்சு இருந்தார். 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளி மூலம் அவருக்கு  20 லட்சம் ரூபாய் வரை கிடைத்திருக்கும்.




இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் மஞ்சுவின் விளை நிலத்தில் நுழைந்து தக்காளி செடிகாளை நாசமாக்கியுள்ளனர். நேற்றைய தினம் வழக்கம்போல் மஞ்சு தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தக்காளி பயிர்கள் சின்னாபின்னமாகி கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். மர்மநபர்கள் பயிர்களை நாசமாக்கியதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் புறநகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தமிழ்நாட்டு நிலவரம்: 


தமிழ்நாட்டை பொறுத்தவரை தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு மொத்த வியாபர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில்லறை வியாபார கடைகளில் 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு தக்காளி வரத்து குறைவாக இருக்கும் என்பதால் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.