Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாநிலத்தின் பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், வன்முறை கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.


நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணிப்பூர் சம்பவம்:


மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த மே 3ஆம் தேதி நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் கடந்த 9 நாட்களாக முடங்கி போயுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாக மணிப்பூரில் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது வெடித்துள்ள வன்முறை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீண்டும் வன்முறை:


அண்டை மாவட்டமான பிஸ்ணுபூரின் காங்வை, பவுகாக்சாகவோ பகுதியில் இந்த வன்முறை வெடித்துள்ளது. பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த தற்காலிக முகாமை கும்பல் தாக்கியதால், அவர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வனத்துறை கட்டிடமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த ஆயுதங்களும் சூறையாடப்பட்டுள்ளது. 


மேலும், ஹீங்காங் மற்றும் சிங்ஜமேய் காவல் நிலையங்களில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அந்த கும்பல் கைப்பற்ற முயன்றது, ஆனால் பாதுகாப்பு படையினர் அவர்களின் தடுக்க முயன்றனர். அப்போது, வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.  மற்றொமொரு இடத்தில் அதாவது சுராசந்த்பூர் மாவட்டத்தில் 600 பேர் கொண்ட குழு இருந்தது. இந்த குழுவினைக் கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சுமர் 25 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தல் இம்பால்  மேற்கு, கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க 


Crime: அராஜகம்.. நட்ட நடுரோட்டில் போலீஸ் எஸ்.ஐ. சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!