ஒரு திரைப்படத்தின் காட்சியைப் போல நம் கண்முன்னே விரியும் அந்தக்கதை வழக்கம் போல ஒரு மழையின் நடுவே தொடங்கியுள்ளது.


2016ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சாந்தினி சந்திரன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கானோரில் ஒருவர். தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட் எப்படி வருமோ என்ற எதிர்பார்ப்பும் பதற்றமுமாக தன்னுடைய காதலன் கைபிடித்து நடந்து செல்கிறார். அப்போது எங்கிருந்தோ எதிர்பாராத மழை பெய்கிறது. குடை விரித்து ஒரு குடைக்குள் இருவருமாக செல்கிறார்கள். அடுத்த நாள் எதிர்பார்த்த மாதிரியே சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வருகின்றது. தேர்வில் வெற்றிபெற்றவர்களின் புகைப்படங்கள் நாளிதழை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த தேர்வில் சாந்தினி வெற்றிபெறவில்லை. ஆனாலும் அவர் புகைப்படம் ஆங்கில நாளிதழில் வருகிறது.





'ஊரில் மழை' என இரண்டு வரி செய்தியுடன் சாந்தினி அவரது காதலருடன் நடந்து வந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனைக்கண்டு இருவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக  நாளிதழ் நிறுவனத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர். நாங்கள் திருமணமே செய்யவில்லை. எங்களை ஏன் புகைப்படம் எடுத்தீர்கள் என கேட்டுள்ளனர்.அந்த விவகாரம் அப்படியாக சென்றுள்ளது. அந்த புகைப்படத்தால் என்ன சிக்கல் ஏற்பட்டது என சிலர் சாந்தியினியின் பதிவில் கேள்வி எழுப்ப, அப்படி  ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனாலும் எங்கள் வீட்டில் சில தேவையற்ற குழப்பத்தை உண்டு செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.




இன்று தன் காதலரையே கரம் பிடித்துவிட்டார் சாந்தினி. 2017 சிவில் சர்வீஸ் தேர்விலும் வெற்றி பெற்று இப்போது திரிபுராவில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்த அழகிய நினைவு மனதில் ஓட மீண்டும் அந்த புகைப்படக்காரருக்கு போன் செய்த சாந்தினியின் கணவர் அந்த மழைக்கால புகைப்படத்தின் ஒரிஜினல் காப்பியை கேட்டு வாங்கியுள்ளார். அந்த புகைப்படக்காரரையும் தன் ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ள சாந்தினி உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அழகான நினைவுகளை படித்த ட்விட்டர்வாசிகள் சாந்தினி-அருண் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படக்காரரையும் பாராட்டியுள்ளனர்.