ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
கோவிந்த் சிங் தோதாஸ்ரா, ஹரிஷ் சவுத்ரி மற்றும் ரகு ஷர்மா ஆகியோர் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக அளித்ததை அடுத்து இது நடந்தேறியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அமைச்சர்கள் குழுவுடனான சந்திப்புக்குப் பிறகு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை ராஜ்பவனில் நடைபெறலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.
முன்னதாக, முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தானுக்குப் பொறுப்பான ஏஐசிசி பொதுச் செயலாளர் அஜய் மக்கன் மற்றும் பிசிசி தலைவர் தோதாஸ்ரா ஆகியோர் ‘கிசான் விஜய் திவாஸ்’ கூட்டத்தில் உரையாற்றினர். அதன்பிறகு, முதல்வர் மற்றும் ராஜஸ்தான் விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது.
அஜய் மக்கன் நேற்று இரவு ஜெய்ப்பூரில், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சிக்காக பணியாற்ற விருப்பம் தெரிவித்த மூன்று அமைச்சர்களின் ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவிந்த் தோதாஸ்ரா பிசிசி தலைவராக இருக்கும் போது, ஹரிஷ் சவுத்ரி மற்றும் ரகு ஷர்மா ஆகியோர் முறையே பஞ்சாப் மற்றும் குஜராத்தில் கட்சியின் விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்த பிறகு, அமைச்சரவையின் பலம் 21ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. ராஜஸ்தானில் முதலமைச்சர் உட்பட அதிகபட்சமாக 30 அமைச்சர்கள் இருக்கலாம்.
பல மாதங்களாக, முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது விசுவாசிகளுக்கு மாநில அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தவிர, அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேட்சைகள் மற்றும் பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய எம்எல்ஏக்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
முதமைச்சர் அசோக் கெலாட், விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என சமீபத்தில் சூசகமாக தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்