இன்று  முதல் 10-ஆம் தேதி வரை பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் மணிப்பூர் விவகாரம்தான். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பெரும் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. இருப்பினும் மத்திய அரசால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுதான் வருகிறது.


இதையும் படிங்க..


Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்கள் பற்றி சபாநாயகர் அறிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று முதல் 10 ஆம்  தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10-ஆம்  தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் அறிவித்துள்ளார்.  


இதில் முக்கியமாக ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, கடந்த 5ம் தேதி உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, மக்களவை செயலகம் அறிவித்தது.


இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி. இன்றைய நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதங்களை ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.