இந்தியாவின் பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமலாக்கத் துறையும், சிபிஐயும் எல்லா கட்சிகளிலும் இருக்கும் ஊழல்வாதிகளை ஒரே கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது. அவர்கள் ரெய்டு செல்வார்கள். அங்கே இருப்பர்கள் நெற்றியில் துப்பாக்கி வைப்பார்கள். பின்னர் பாஜகவுக்கு ஆதரவா இல்லை ஜெயிலா எனக் கேட்பார்கள். ஆம் என்றால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் ஜெயில் தான். அதனால் மோடி என்று இந்த தேசத்தின் பிரதமராக இல்லாமல் போகிறாரோ அன்றுதான் இந்த தேசம் ஊழலற்ற தேசமாக மாறும். பாஜக அரசு ஆட்சியிழந்து, பாஜகவினர் சிறைக்குப் பின்னால் போக வேண்டும். அன்றே இத்தேசத்திற்கு விடுதலை" என்று கூறியுள்ளார்.


முன்னதாக நேற்று பிரதமர் மோடி பேசுகையில், மத்திய புலனாய்வு அமைப்புகளை குற்றஞ்சாட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது என்பது ஊழல்வாதிகள் ஒரே மேடையில் திரள்வதற்கு சமம் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே கெஜ்ரிவால் இன்று பேசியுள்ளார்.


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது.


எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர். பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்நிலையில் தான் மத்திய புலனாய்வு அமைப்புகளை குற்றஞ்சாட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது என்பது ஊழல்வாதிகள் ஒரே மேடையில் திரள்வதற்கு சமம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் இந்தியாவின் பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.