வெறும் எஃப்ஐஆர்கள் மட்டுமே வெறுப்புப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தடுப்பது என்பது தேசத்தில் சமூக நல்லிணக்கத்தை பேண அவசியமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வெறுப்புப் பேச்சுகள் என்பது அரசியலும் மதமும் எப்போதும் தனித்தனியாக பார்க்கப்படுகிறதோ, எப்போது அரசியலுக்காக அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துகின்றனரோ அப்போது நின்றுவிடும் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்தினா அடங்கிய அமர்வு வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பது என்பது மத நல்லிணக்கத்தைப் பேண மிகவும் அவசியமானது என்று தெரிவித்தனர். மேலும், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதாவது வெறுப்புப் பேச்சுகள் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்வது தாண்டி என்ன மாதிரியான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று விளக்க வேண்டும் என்றனர். அப்போது மேத்தா, இதுவரை வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக 18 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்திய அரசியலமைப்பு இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக வரையறுத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதியன்று டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட் மாநில அரசுகள் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் கடுமையாக நடக்க வேண்டும். புகாருக்காக காத்திருக்காமல் குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது.
மேலும், வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது என்பது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கவனிக்கத்தக்க வழக்கு:
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். வெறுப்புப் பேச்சுக்கள் நம் நாட்டில் லாபம் தரும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு அரசியல் கட்சி ஒன்று நிதியுதவி செய்ததைக் குறிப்பிடலாம். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் முன்வைத்த கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் யுயு லலித், எஸ்ஆர் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மனுதாரர் தமது மனுவில் வெறுப்புப் பேச்சுக்களால் தேசத்தின் ஒட்டுமொத்த சூழல் மீதும் கறைபடியும் எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்பது சரியானதே. அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் இருக்கலாம். அது ஏற்கத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால்,மனுவில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே தெளிவாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 58 வெறுப்புப் பிரச்சார சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சம்வங்களுக்கான விவரம் இல்லையே. யார் பேசியது? வழக்குப் பதியப்பட்டதா என்ற விவரமும் இல்லை. இது தொடர்பாக மனுதாரர் மேலும் தகவல்களை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.