தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வந்த நிலையில் நேற்று மதியம் மிக மோசமான நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், குருகிராமில் மட்டும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று மாலை 4 மணியளவில் 313 ஆக பதிவானது, சனிக்கிழமையன்று 248 ஆக இருந்த நிலையில், அது கணிசமாக உயர்ந்துள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது. காற்று மாசி காரணமாக மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓடுவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை தவிர்த்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஏதேனும் அசாதாரணமான இருமல், மார்பில் அசௌகரியம், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அந்த செயல்பாட்டினை நிறுத்துமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.
டில்லியின் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என்பதால், சனிக்கிழமையன்று, காற்றின் தர மேலாண்மை ஆணையம் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (ஜிஆர்ஏபி) 2 ஆம் கட்டத்தை விதிப்பதாக அறிவித்தது. GRAP என்பது காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளின் தொகுப்பாகும். மக்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அதிகாரிகள் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், CNG/எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் முக்கியமாக அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மரக்கன்றுகள் எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைவதாக கூறப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு முன்பு 15 அம்ச குளிர்கால செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.