குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கோரி க்ரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) நேற்று சுமார் 1 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட்டைக் கைப்பற்றினர்.
எல்லை பாதுகாப்பு படையினர், குஜராத் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், கோடேஷ்வர் எல்லையில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோரி க்ரீக்கில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து தோராயமாக 1 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட் மீட்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், "மே 26 அன்று, எல்லை பாதுகாப்பு படையினரின் தேடுதல் பணியின் போது, BOP கோட்டேஷ்வரிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோரி க்ரீக்கில் இருந்து தோராயமாக 1 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பாக்கெட் மீட்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப் பொருள் பாக்கெட் இதற்கு முன் மீட்கப்பட்ட போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஒத்தி இருந்ததாகவும், சர்வதேச சந்தையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் இருக்கும் ஹெராயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"இருப்பினும், இன்று மீட்கப்பட்ட போதைப் பொருளின் சரியான தன்மை மற்றும் வகை கண்டறியப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2023 முதல், 29 சரஸ் பாக்கெட்டுகள் மற்றும் 6 பிற போதை பொருட்களின் பாக்கெட்டுகள் ஜக்காவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது" என செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ எடையுள்ள போதை பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சிறப்பு தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நேற்று கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பாக்கெட் கடல் அலையினால் கரை ஒதுங்கியிருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்தியாவின் எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 23-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் (IB) ஆளில்லா விமானம் பைனி ராஜ்புதானா கிராமத்தில் அமிர்தசரஸ் பகிதியை ஊடுருவியபோது எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதுஅதில் 2.1 கிலோ எடையுள்ள ஹெராயின் இணைக்கப்பட்டிருந்தது.
மே 19 ஆம் தேதியிலிருந்து இது 5வது ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஆளில்லா விமானமும் கடந்த 20-ஆம் தேதி எல்லை படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல், இந்திய வான்பரப்பு எல்லையை கடந்த ஆளில்லா விமானம் அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் துப்பாக்கிச் சூடு மூலம் வீழ்த்தப்பட்டது. அதன் கீழ் 3.3 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.