டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்காக சுமார் ரூபாய் 45 கோடி செலவிட்டதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Continues below advertisement

44 கோடி:

பாஜகவின் இந்த குற்றச்சாட்டிற்கு டெல்லி அரசிடமிருந்தோ அல்லது ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தோ எந்தவித பதிலும் தற்போது வரை அளிக்கப்படவில்லை.  இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது புனரமைக்கப்படவில்லை, பழைய கட்டிடத்தின் இடத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது முகாம் அலுவலகமும் இந்த இடத்தில் உள்ளது. சுமார் ரூபாய் 44 கோடி செலவில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது, மேலும் பழைய கட்டிடங்கள் புதிய கட்டிடம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சிவில் லைன்ஸில் உள்ள நம்பர் 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோட்டில் (flagstaff road) உள்ள அவரது அரசு தங்குமிடத்தின் மறுசீரமைப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ₹43.70 கோடிக்கு எதிராக மொத்தம் ₹44.78 கோடி செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் செப்டம்பர் 9, 2020 முதல் ஜூன் 2022 வரை ஆறு கட்டங்களாக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

என்னென்ன செலவுகள்?

ஆவணங்களின்படி, உள் கட்டமைப்பிற்கு (interior designs) ₹11.30 கோடி, கல் மற்றும் பளிங்கு தரைக்கு ₹6.02 கோடி, உள் கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக்கு ₹1 கோடி, மின் சாதனங்கள் மற்றும் இதர சாதனங்களுக்கு ₹2.58 கோடி, அவசர கால தீயணைக்கும் அமைப்புக்கு ₹2.85 கோடி, அலமாரி மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு 1.41 கோடியும், சமையலறை உபகரணங்கள் மீது ₹1.1 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட ₹9.99 கோடியில் தனித் தொகையான ₹8.11 கோடி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்துக்குச் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஒரு அறிக்கையில், டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில், கெஜ்ரிவாலின் பங்களாவை "அழகுபடுத்துவதற்கு" ரூபாய் 45 கோடி செலவிடப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.  "கொரோனா கால கட்டத்தில் பெரும்பாலான பொது பணிகள் முடங்கியபோது, ​​தனது பங்களாவை அழகுபடுத்த சுமார் ரூபாய் 45 கோடி செலவழித்த அவரது தார்மீக அதிகாரம் குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும்" என்று சச்தேவா கூறினார். கெஜ்ரிவால் ஒரு வீட்டில் வசிக்கவில்லை, ஒரு "ஷீஷ் மஹால்" (ஆடம்பர வீடு) நிறுவப்பட்டுள்ளது என்று டெல்லி பாஜக தலைவர் கூறினார். மேலும் தார்மீக அடிப்படையில் முதல்வரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பதவி விலக வேண்டும்:

செப்டம்பர், 2020 முதல் டிசம்பர், 2021 வரையிலான 16 மாத காலப்பகுதியானது, தொழில்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, தில்லி அரசின் வருவாய் பாதிக்குக் குறைவாகக் குறைந்து, நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களை நிறுத்திய போது இந்த புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, கெஜ்ரிவாலின் "எளிமை மற்றும் நேர்மை" தன்மை தற்போது "வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.