இந்தியாவில் புதிதாக 7,830 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று 38,000 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 6000-ஐ கடந்தது ஆனால் அதனை தொடர்ந்து தினசரி தொற்று பாதிப்பு குறைவாக பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் xbb 1.16 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த மாறுபட்ட வைரஸால் உயிர் பறிக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.72 சதவீதமாக உள்ளது. இறப்பி விகிதம் 1.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 40,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4875 பேர், டெல்லியில் 2876 பேர், ஹரியானாவில் – 2149 பேர், குஜராத்தில் 1947 பேர், தமிழ்நாட்டில் 2301 பேர்- என மொத்தம் 40,215 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி கடந்த வாரம் மத்திய சுகாதார துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 28,050 அரசு மருத்துவமனை மற்றும் 5,635 தனியார் மருத்துவமனை என மொத்தம் 33,685 மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட/சிவில் மருத்துவமனைகள், CHCகள் மற்றும் HWCகள் மற்றும் PHCகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் சுகாதார மையங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆக்ஸிஜன் படுக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், வென்டிலேட்டர்கள், பிஎஸ்ஏ ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகள் உள்ளிட்ட முக்கியமான மருத்துவ உள்கட்டமைப்பு மதிப்பீடு செய்யப்பட்டது. உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 65 கோடி 78 லட்சத்து 335 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 38 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.