பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4:35 மணி அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை உறுதி செய்து இந்திய ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூடு:


இதையடுத்து, அந்த பகுதியை காவல்துறையும் ராணுவத்தினரும் சுற்றி வளைத்து, அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுகுறித்து பதிண்டா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் குல்னீத் குரானா கூறுகையில், "ராணுவம் அளித்த தகவலின்படி, இந்த சம்பவத்தை பயங்கரவாத அமைப்பு செய்ததாக சந்தேகம் எழவில்லை. இறந்தவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்ட ராணுவ வீரர்கள்:


ராணுவத்தினர் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில் இது நாசவேலையாக இருக்கும் என சந்தேகிக்கவில்லை. ஆனால், தகவல்களுக்காக காத்து கொண்டிருக்கிறோம்" என்றார்.


பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்கள் கொண்ட இன்சாஸ் துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராணுவமும் பஞ்சாப் காவல்துறையும் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறது. 


நாட்டின் மிக பெரிய ராணுவ முகாம்:


நாட்டின் மிக பெரிய ராணுவ முகாமாக இருப்பது பதிண்டா ராணுவ முகாம். சண்டிகர்-ஃபாசில்கா பாதையில் தேசிய நெடுஞ்சாலை 7-இல் இந்த ராணுவ முகாம் அமைந்துள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித் பால் சிங் விவகாரம் ஏற்கனவே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சமயத்தில், ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் சுட்டு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த 20 நாள்களுக்கு மேலாக காவல்துறையிடம் சிக்காமல் ஆட்டம் காண்பித்து வருகிறார்.


இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பால்சிங், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் இந்தியாவிலேயே மாறுவேடத்தில் சுற்றித்திரிந்து வருவதாகவும் பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்த உள்ளன. 


மேலும் படிக்க: ODI World Cup 2023: தொடர்ந்து எழுந்த புகார்கள்... மேம்படுத்தப்பட இருக்கும் 5 மைதானங்கள் .. 500 கோடியை இறக்கிய பிசிசிஐ..!