டெல்லியில் 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்தை உடைத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கொடியை ஏற்றியிருக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.


சட்டமன்றத் தேர்தலில் டெல்லியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியப் பிறகு தொடர்ந்து இரண்டு முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவின் கைகளே கடந்த 15 ஆண்டுகளாக ஓங்கியிருந்தது. இந்த நிலையில், 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற்றது.


250 இடங்களுக்கு 1349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 50.48 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில், இத்தேர்தலின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களான 126ஐ விட 8 இடங்கள் அதிகமாக 134 இடங்களில் வெற்றி பெற்று டெல்லி உள்ளாட்சியையும் கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. உள்ளாட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் மட்டும் வென்று பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறது.


சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை ஆம் ஆத்மி க்ளீன் ஸ்வீப் செய்யும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், அதை பொய்யாக்கி பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்த வரை 42.2 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி.


கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 26 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையிலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையிலும் இந்த தேர்தலில் தட்டித் தூக்கியிருக்கிறது ஆம் ஆத்மி. ஆனால், 2020 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிட்டால் ஆம் ஆத்மிக்கு சுமார் 11% வாக்குகள் குறைந்திருக்கின்றன. 


இட ஒதுக்கீடு மூலமா வந்தவரா நீங்க...? பிஹார் அரசு அதிகாரியிடம் நக்கலாக கேட்ட நீதிபதி...! நடந்தது என்ன?


தோற்றிருந்தாலும் இந்த தேர்தல் பாஜகவிற்கு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது. கடந்த 2017 உள்ளாட்சித் தேர்தலில் 36 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில் இந்த முறை 39 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், 181 இடங்களில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை 103 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் பரிதாபத்திற்குரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் தான்.


ஒரு காலத்தில் டெல்லியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது 12 சதவீத ஓட்டுகள் மட்டுமே. 10 இடங்களில் மட்டுமே வென்று, கடந்த தேர்தலில் கிடைத்ததை விட சுமார் 9% வாக்குகளை இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.