பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ள இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் கலவையான முடிவுகளே வெளியாகியுள்ளன. குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக வெற்றி வெற்ற நிலையிலும், இமாச்சல பிரதேசத்தில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.


மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 157 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் வரலாறு படைத்துள்ளது பாஜக. குஜராத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் இந்த மாதிரியான அதிக இடங்களில் வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றதே இல்லை.


கடந்த 1985ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 149 தொகுதிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது, அதை முறியடிக்குத்துள்ளது பாஜக. 


இமாச்சலை பொறுத்தவரை, கடும் போட்டி அளித்த போதிலும், பாஜக தோல்வியை தழுவியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 26 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது. எனவே, அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.


கடந்த நவம்பர் 12ஆம் தேதி, இமாச்சல பிரதேசத்திலும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாக குஜராத்திலும் தேர்தல் நடைபெற்றது.


இந்நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து கூறியுள்ள பிரதமர் மோடி, மக்கள் சக்திக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றி குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "குஜராத் மக்களுக்கு நன்றி. இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சி வசத்தில் மூழ்கிவிட்டேன். 


 






வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இது இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்" 


கடினமாக உழைத்த குஜராத் தொண்டர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது" என பதிவிட்டுள்ளார்.


இமாச்சல் தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ள அவர், "பாஜக மீதான பாசத்திற்கும் ஆதரவிற்கும் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், மக்கள் பிரச்னைகளை இனிவரும் காலங்களில் எழுப்பவும் தொடர்ந்து பாடுபடுவோம்" என பதிவிட்டுள்ளார்.