கல்வி ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கியவர்களை முன்னேற வைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு முறை. 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவே காணப்படுகிறது.
இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் அறியாமல் பலர் கருத்து தெரிவித்து வருவதும் உண்டு. போதுமான விழிப்புணர்வு இல்லாத மக்கள்தான் இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால், நன்கு படித்த சிலர் கூட அப்படி இருப்பது பெரிய பிரச்னையாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தெரிவித்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, உத்தர பிரதேசத்தை போலவே பிகாரிலும் ஒரு பெண்ணின் வீடு இடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், பிகார் காவல்துறை அதிகாரிகளிடம் அந்த நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி, கடுமையாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நவம்பர் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அரசு அதிகாரியிடம் இடஒதுக்கீடு மூலம் வேலை கிடைத்ததா என்று நீதிபதி சந்தீப் குமார் கேட்கிறார். இதற்கு, வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களும் சிரிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் போதிலும், நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட நிலம் கையகப்படுத்தும் அதிகாரியான அரவிந்த குமார் பாரதி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், விசாரணை முடிந்து, வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். மேலும், பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளார்.
அப்போது, இந்தியில் பேசிய நீதிபதி, "பாரதி, நீங்கள் வேலைக்கு இடஒதுக்கீடு மூலம்தானே உள்ளே வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஆமாம் என தெரிவிட்டு, அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அப்போது, "பெயரில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது" என நீதிபதி நக்கலாக பேசுகிறார். இந்த வழக்கால், அவர் பெரிய சிக்கலில் மாட்டு கொண்டுள்ளதாகவும் நீதிபதி கூறுகிறார்.
நீதிமன்ற அறையில் இருந்து அதிகாரி அரவிந்த குமார் பாரதி வெளியேறியபோது, சில வழக்கறிஞர்கள் அவரை நோக்கி சிரிக்கின்றனர். சிலர் கிண்டல் அடிக்கின்றனர். அந்த சமயத்தில் பேசிய வழக்கறிஞர் ஒருவர், "இந்த விவகாரம் குறித்து நீதிபதி புரிந்து கொண்டிருப்பார்" என்றார்.
பின்னர், இட ஒதுக்கீடு பற்றி நீதிபதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதை, சீரியசாக சொல்லவில்லை என விளக்கம் அளித்தார்.