சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு சம்பந்தமான பாடம் மட்டும் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து என்சிஆர்டி விளக்கமளித்துள்ளது.


இது குறித்து என் சிஆர்டி இயக்குநர் பிரசாத் சக்லாணி அளித்தப் பேட்டியில், நாங்கள் கடந்த ஆண்டே பாடங்கள் குறைப்பு பற்றி விளக்கியிருந்தோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடியாக பாடங்களை எடுக்க முடியாததால் நிறையவே பாடத்திட்டத்தை குறைக்கும்படி ஆனது. மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவுவது சமுதாயத்தின் தேசத்தின் கடமை அல்லவா? பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களில் சிலவற்றை அதனால் நீக்கினோம். அதுவும் கடந்த ஆண்டே எடுக்கப்பட்ட முடிவு. அது இந்த கல்வியாண்டிலும் தொடர்கிறது. மற்றபடி 'Kings and Chronicles' and the 'The Mughal Courts' என்ற குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே நீக்கவில்லை. எந்த கருத்தியலையும் உயர்த்திப் பிடிக்க இவ்வாறாக நடக்கவில்லை என்றார்.


முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாற்றை மதத்தின் வழியாக மாற்றி எழுதுவது வலுத்து வருகிறது. என்சிஆர்டி 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாய பேரரசின் வரலாற்றை நீக்கியுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.






சிவ சேனா உத்தவ் பால் தாக்கரே அணி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உத்தரப் பிரதேச அரசு சொந்தமான வரலாறும், உயிரியலும் எழுதும் என்று பதிவிட்டுள்ளார்.


முகலாய வரலாற்றில் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சி, பனிப்போர், உயிர்கள் இனப்பெருக்கம் என 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் வரலாறு, அறிவியல் எனப் பல்வேறு பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்தே பிரியங்கா திரிவேதி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.






இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி பேசிய தினேஷ் பிரச்சாத் சக்லாணி, இது முற்றிலும் போலியான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற தகவல். இப்படிப்பட்ட ஒரு வாதத்தை முன்னெடுப்பதில் எந்த ஒரு அடிப்படையும் இல்லை. எந்த வித சார்பும் இல்லை. இவை எல்லாம் சிலர் வேண்டுமென்றே திரித்துக் கூறும் பொய். ஆனால் அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.


ஒவ்வொரு முறையும் சில பாடங்களை மாற்றும்போதும் நீக்கும்போதும் சர்ச்சை வருகிறது. ஆனால் நாங்களோ ஒரே மாதிரியான தகவல் வெவ்வேறு இடங்களில் ரீபீட் ஆகும் போதே அதனை நீக்குகிறோம். காரணம் இல்லாமல் இவர்கள் சொல்வது போல் கொள்கைக்காக எதையும் நீக்குவதில்லை என்றார்.