தென்னிந்தியாவின் முக்கியமான மாநிலமான கர்நாடகாவில் 224 தொகுதிகள் அமைந்துள்ளது. இந்த 224 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 24-ந் தேதி சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. நடைபெற உள்ள சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியன காங்கிரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


பா.ஜ.க.விற்கே பெரும்பான்மை:


இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பாக தீவிர பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கும். சில தொகுதிகளில் ஆச்சரியப்படக்கூடிய முடிவுகள் கிடைக்கும். தொண்டர்களும் தலைவர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.


மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. 119 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ளது. காங்கிரஸ் 75 எம்.எல்.ஏ.க்களுடனும், ஜனதா தளம் 28 எம்.எல்.ஏ.க்களுடனும் உள்ளது. ஒரே கட்டமாக நடைபெற உள்ள கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடித்தே தீர முக்கிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.






அரசியல் கட்சிகள் தயார்:


தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேட்பாளர் பட்டியலில் 50 பேர் வரை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 13-ந் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பா.ஜ.க. சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், அக்கட்சியின் மூத்த தலைவரும், 5 முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தவருமான ஸ்ரீனிவாஸ் ஷெட்டி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பா.ஜ.க.விற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்தும் கட்சி தீவிரமாக ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மாநில தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பிரதமர் மோடி, அமித்ஷா சமீபகாலமாக அடிக்கடி கர்நாடகா வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு


மேலும் படிக்க: Unemployement : இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை..வெளியான ஷாக் அப்டேட்...தமிழ்நாட்டின் நிலை என்ன...?