மராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பின்னர் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை முழு மூச்சாக செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


முகலாயர்கள் மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் ஆட்சியின் போது அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டியது சத்ரபதி சிவாஜி மகாராஜ் எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  மராட்டிய போர் மன்னருக்குப் பிறகு தொடர்ந்து கோயில் மறுசீரமைப்பு பணிகள் பிரதமர் நரேந்திர மோடியால்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையானது சமூகத்தில் அட்டூழியங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாகவும், அவரால் தொடங்கப்பட்ட ‘சுயராஜ்யம்’ (Swaraj)க்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.


மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு புனேவில் உள்ள நர்ஹே-அம்பேகானில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தீம் பூங்காவான 'சிவ்ஸ்ருஷ்டி'யின் முதல் கட்டத்தை திறந்து வைத்து அமித் ஷா பேசினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


21 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து உருவாகியிருக்கும் இந்தத் திட்டம், பத்ம விபூஷன் விருது பெற்ற ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே சத்ரபதி சிவாஜிக்கு அரசு சாரா அமைப்பு ஒன்று சிலை வைக்க உள்ளது. அந்த அமைப்பின் பெயர் அம்ஹி புனேகர்.


நோக்கம் என்ன?


எதிரிகளை எதிர்த்துப் போரிடும் ராணுவ வீரர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியம் மற்றும் தார்மீக விழுமியங்களால் உந்தப்பட்டு, அவரது சிலையை தினமும் பார்த்து, அவரின் வீரத்தை நினைத்துப் போரிடும் வலிமையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நோக்கத்திற்காகவே அம்ஹி புனேகர் அமைப்பு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கிரண் , தங்தார் திட்வால் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலை வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


அனுமதி பெற்ற பிறகு சிலை:


காஷ்மீரில் குப்வாரா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சாகர் தத்தாத்ரேயாவிடம் அனுமதி பெற்ற பிறகு, சிலை நிறுவப்படும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் அடகேபர் ஸ்மாரக் சமிதி தலைவர் அபய்ராஜ் ஷிரோல், அம்ஹி புனேகர் தலைவர் ஹேமந்த் ஜாதவ் ஆகியோர் இந்த முயற்சியை திட்டமிட்டுள்ளனர்.


இதுகுறித்து ஹேமந்த் ஜாதவ் கூறுகையில், "சிலை நிறுவும் பணிக்கான பூமி பூஜை மார்ச் இறுதிக்குள் நடைபெறும். சிவாஜியின் வருகையால் புனிதம் அடைந்த ராய்காட், தோரணா, சிவனேரி, ராஜ்காட், பிரதாப்காட் கோட்டைகளிலிருந்து மண்ணும் நீரும் காஷ்மீருக்கு எடுத்து செல்லப்பட்டு அதை வைத்து பூமி பூஜை மேற்கொள்ளப்படும்" என்றார்.


உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்த சிவாஜி மகாராஜ்


இது தொடர்பாக அபய்ராஜ் ஷிரோல் கூறுகையில், "சத்ரபதி சிவாஜி மகாராஜ், தனது உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்தார். அவரது கொரில்லா போர் நுட்பங்களை உலகின் பல்வேறு நாடுகள் பின்பற்றுகின்றன.


சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிறுவப்பட்டு, எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு அவரின் கொள்கைகள் உத்வேகம் அளிக்கும்.