நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கியது. அதன்பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரை நடைபெற்றது. அது நேற்று பிரதமர் மோடி உரையுடன் நிறைவு பெற்றது. 


 


இந்நிலையில் நேற்று பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்கியது. அதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினார். அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மால் சீதாராமன் அவையில் இல்லை. இது தொடர்பாக தயாநிதி மாறன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். 


 



அதில், “தற்போது மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா டூடே தொலைக்காட்சியில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று வருகிறார்.அவருக்கு நாடாளுமன்றம் முக்கியமா? அல்லது இந்தியா டூடே தொலைக்காட்சி விவாதம் முக்கியமா? நாடாளுமன்றத்தின் அவைக்கு அவர் மரியாதை அளிக்கவில்லை. இது மிகவும் வேதனையளிக்க கூடிய விஷயம்” எனக் கூறியுள்ளார். 


முன்னதாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அதில், "சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியை இந்தியாவைப் பிரிக்க திட்டமிடுகிறது. அவர்களின் கொள்கையே பிரித்தாளும் சூழ்ச்சி தான். என் தமிழ் சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கில் சாலையில் திரண்டு, மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போது, கண்களில் கண்ணீரோடு `வீரவணக்கம்.. வீரவணக்கம்’ என முழக்கமிட்டுச் சென்றனர். இது தேசத்தின் அடையாளம். முப்படைத் தளபதியைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இது என்னுடைய நாடு என்று நான் சொல்வதை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே வெறுத்து வருகிறது. பிரித்தாள்வது என்பது காங்கிரஸின் டி.என்.ஏவில் இருக்கிறது’ எனக் கடுமையாக சாடியிருந்தார்.


மேலும் படிக்க: திடீரென தலைப்பு இல்லாமல் பகிரப்பட்ட மணிஷங்கர் அய்யர் புகைப்படங்கள்...! குழப்பத்தில் நெட்டிசன்கள்..!