Peacock Curry Video : இணைய வசதி மலிவாக கிடைக்க ஆரம்பித்த உடன் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வந்தது. அதில் வீடியோ பதிவிட 1000 நபர்கள் இருக்க அதை பொறுமையாக அமர்ந்து பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இப்படியாக சமையல் செய்வது, நடனமாடுவது, பாடுவது உள்ளிட்டவற்றில் தொடங்கி அவர்கள் குடும்பத்தில் அன்றாட என்ன நடக்கிறது என்பதை காட்ட தினமும் வ்ளாக் போன்றவற்றை பதிவிட்டு வருகின்றனர் யூடியூபர்கள்


பெரிய பாத்திரங்களில் 100 கோழி, 10 ஆடு சமைத்து அதை வீடியோவாக பதிவிடும் யூடியூப் சேனல்களும் இருந்து வருகின்றன. இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், ”வித்தியாசமாகத்தான் நாங்கள் ஏதாச்சும் செய்வோம்” என்று ஐஸ்கிரீம் தோசை, ஐஸ்க்ரீம் ரசம், மட்டன் பிரியாணி கேக் என கண்ணில்படும் கலவரமான விஷயங்களை சமைத்து சாப்பிட்டு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள் யூ ட்யூப் உணவு வ்ளாகர்கள்.




இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் சிர்சிலா பகுதியை சார்ந்த யூடியூபர் கொடாம் ப்ரனாய் குமார் என்பவர் மிளகு போட்டு மயிலை குழம்பு வைத்து சாப்பிடும் வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிக்கிறார். வீடியோ செம வைரலாக, இந்திய வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அன்று அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


வனத்துறையினர், இது போன்ற வீடியோ பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அழிக்கும் நோக்கில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கொடாம் ப்ரனாய் குமாரின் யூ ட்யூப் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கியும் உள்ளனர். சிர்சிலா மாவட்ட எஸ்.பி அகில் மஹஜான், “குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது போன்ற செயலில் ஈடுபட்ட இவருக்கும் இது போன்றவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.” என கூறினார்.


ப்ரனாய் குமாரின் இரத்த மாதிரியையும், அவர் வைத்த மயில் குழம்பும் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட்டில் இது மயில்தான் என்று உறுதி செய்யப்பட்டால், யூடியூபர் ப்ரணாய்க்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுபோல் முன்பு நடந்த சம்பவம்


கடந்த ஜூன் மாதத்தில் திருப்பத்தூரை சார்ந்த 30 வயதான ஜி ராஜேஷ் குமார் என்பவர் சாரைப்பாம்பின் தோலை உரித்து, அதை வெட்டி குழம்பு வைத்து சாப்பிடுவதை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டார். திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி கே.ஆர்.சோழராஜன், ராஜேஷை விசாரித்த போது அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அத்துடன் பாம்பின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை மூட்டு வலி நிவாரணியாக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதனையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 9,39,90 ஆகிய பிரிவுகளில் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன் படி குற்றவாளிக்கு 3 முதல் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது 25,000 ரூபாய் அபராதம் விதிகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.