Adani Hindenburg Sharemarket: இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரிய சரிவு இருக்குமோ என, முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


கலக்கத்தில் முதலீட்டாளர்கள்:


அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்கள் இன்றைய சந்தை நிலவரம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஒரு அறிக்கைதான். அதில், “அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் (SEBI) மாதபி புச்சுக்கு சொந்தமான பங்குகள் இருந்தன.


முறைகேட்டில் உடந்தை என்பதனாலேயே அதானி முழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செபி தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.


கவனிக்கப்படும் அதானி குழும பங்குகள்:


மறுப்புகள் வெளியானாலும், ஹிண்டன்பர்க் அறிக்கை இன்று இந்திய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் , அதானி பவர், அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆகியவை இன்று கவனம் செலுத்தப்படும் 10 அதானி குழும நிறுவனங்களாகும். ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் புதிய அறிக்கைகளைத் தொடர்ந்து, செபி தலைவர் மாதபி புச்சின் கணவரின் பெயரில் உள்ள 360 ONE WAM லிமிடெட் நிறுவன பங்குகளும் கவனத்தை ஈர்த்துள்ளது.


ரூ.6 லட்சம் கோடியை இழந்த அதானி:


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதானி குழுமம் முதலீடுகளை பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து 51 வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த அதானி குழும பங்குகள், சரசரவென்று கடும் சரிவை சந்தித்தன.


ரூ.19.6 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூலதன மதிப்பு, ரூ.13.6 லட்சம் கோடியாக சரிந்தது. அதாவது அதானி குழுமம் 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனிடையே, செபி நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அதனை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான், அதானி குழுமம் மற்றும் செபி இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. 


அதானி குழுமத்தின் மீதான 24 குற்றச்சாட்டுகளில் 22 குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை ஜனவரி 3ஆம் தேதிக்குள் முடித்துவிட்டதாக செபி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மார்ச் 2024 இல் நிறைவடைந்ததாகவும்,  மீதமுள்ள ஒரு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.