கடந்த சில ஆண்டுகளாகவே, கும்பல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுப்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் கல்வி நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா?
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஒன்றின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி பள்ளி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்களிடம் பள்ளி முதல்வர், சீருடை தொடர்பாக விசாரித்துள்ளார். இதையடுத்து, பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ளது கண்ணேப்பள்ளி கிராமம். மாஞ்சேரில் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியின் முதல்வர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜெய்மோன் ஜோசப்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, பள்ளிக்கு சில மாணவர்கள் காவி உடை அணிந்து வந்துள்ளனர். இதை கவனித்த பள்ளி முதல்வர் ஜோசப், மாணவர்களிடம் அதுகுறித்து விசாரித்துள்ளார். 21 நாள் அனுமன் தீட்சைக்கு விரதம் இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி பேசுவதற்கு, பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு மாணவர்களிடம் முதல்வர் கூறினார்.
தெலங்கானாவில் பள்ளி மீது தாக்குதல்:
அன்னை தெரசா பள்ளியில் இந்து உடையை அணிய அனுமதிக்கவில்லை என்று கூறி, சமூக ஊடகங்களில் சிலர் வீடியோவைப் பகிர்ந்தனர். இந்த வீடியோ பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வீடியோ பகிரப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பள்ளியை ஒரு கும்பல் தாக்கியது.
காவி உடை அணிந்த சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பி பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இம்மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டும் என கூப்பிய கைகளுடன் ஆசிரியர்கள் அவர்களை வேண்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.
நிலைமையை கட்டுக்குள் கொண்ட வர காவல்துறை அதிகாரிகள் முயற்சிப்பதும், போராட்டக்காரர்களை பள்ளி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதையும் வீடியோவில் காணலாம். வளாகத்தில் உள்ள அன்னை தெரசா சிலை மீது கும்பல் கற்களை வீசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கும்பலை சேர்ந்த சிலர் முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து, அவரை அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பான பிரிவுகளின் கீழ், முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.