உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயக கடமையாற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
நூற்றாண்டு வரலாறு கொண்ட ஆர்.எஸ்.எஸ்:
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10 மக்களவை தேர்தல்களில் நிலைமை எந்தளவுக்கு தலைகீழாக மாறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வரலாற்றை திரும்பி பார்ப்பது அவசியம். மதச்சார்பின்மையை சுற்றி சுழன்று கொண்டிருந்த இந்திய அரசியலை இந்துத்துவ கொள்கையை சுற்றி சுழல வைத்துள்ளது பாஜக. ஆனால், இந்த மாற்றம் ஒரு நாளில் நிகழ்ந்துவிடவில்லை.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கு கிட்டத்தட்ட நூற்றாண்டு வரலாறு உண்டு. கடந்த 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பல்வேறு சர்ச்சைகளை கடந்து தற்போது சமகால அரசியல் நகர்வுகளை தீர்மானிப்பதில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்த வாஜ்பாயும் அத்வானியும் சேர்ந்து உருவாக்கியதுதான் பாஜக. பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என இந்திய அரசியலை தீர்மானிக்கும் பதவிகளில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகர்களாக இருந்துள்ளனர்.
ஜீரோ டூ ஹீரோ:
இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு நடந்த முதல் தேர்தலில்தான் பாஜக முதன்முதலாக களம் கண்டது. அந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக விழுந்தது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு. இந்திய அரசியல் வரலாற்றில் ஷாபானு வழக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, ராம ஜென்ம பூமி இயக்கம் மூலம் வட இந்திய மாநிலங்களில் தனக்கான செல்வாக்கை பலப்படுத்தியது. அதன் விளைவு, கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த அந்த கட்சி 1989ஆம் ஆண்டு 88 இடங்களை கைப்பற்றி இந்திய அரசியலில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தி கொண்டது.
மண்டல் பரிந்துரைகள் நிறைவேற்றம், சந்திரசேகர் அரசாங்கம் கவிழ்ந்ததால் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ராமர் கோயிலுக்காக அத்வானி நடத்திய ரத யாத்திரை போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின.
நான்கே ஆண்டுகளில் மூன்று பொதுத்தேர்தல்:
இதற்கு மத்தியில் நடத்தப்பட்ட 1991 மக்களவை தேர்தலில் பாஜக 119 இடங்களை பிடித்தது. 1992ஆம் ஆண்டு, பாஜகவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆண்டாக மாறியது. கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த ஒரு சம்பவம், அடுத்த 30 ஆண்டுகள் நடத்த பல்வேறு சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தன. குறிப்பாக, 4 ஆண்டுகளில் மூன்று பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1996, 1998 மற்றும் 1999 மூன்று தேர்தல்களிலும் பாஜகவே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பிரதமராக வாஜ்யாப் பொறுப்பேற்ற போதிலும் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்ந்தது. முதலில் 13 நாள்களும் பின்னர் 13 மாதங்களும் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயுக்கு திமுக, தெலுங்கு தேசம் போன்ற பிராந்திய கட்சிகள் கொடுத்த ஆதரவு இந்திய வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பை அளித்தது.
அசுர வளர்ச்சி அடைந்த பாஜக:
ஆனால், தேர்தலை முன்கூட்டியே அறிவித்தது, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவறவிட்டது என பல்வேறு காரணங்களால் 2004ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது பாஜக. 2004ஆம் ஆண்டு 138 இடங்களில் வென்ற பாஜக, 2009ஆம் ஆண்டு, 116 இடங்களில் மட்டுமே வென்றது.
10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, குஜராத் மாடல், வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜக, வரலாற்றில் முதல்முறையாக 2014ஆம் ஆண்டு மோடியின் தலைமையின் கீழ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
புல்வாமா தாக்குதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற விவகாரங்களால் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 303 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.