ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கோட்டையாக ஹைதராபாத் கருதப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, ஹைதராபாத் மக்களவை தொகுதியில் ஓவைசியின் குடும்பமே வெற்றி பெற்று வருகிறது. கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தவர் சுல்தான் சலாவுதீன் ஓவைசி.
ஹைதராபாத்தை குறிவைக்கும் பாஜக:
அதற்கு பிறகு, அவரின் மகன் அசாதுதீன் ஓவைசி, ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அவரை வீழ்த்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் ஹைதராபாத் தொகுதியில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.
ஹைதராபாத் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் தனது கட்சியை பலப்படுத்த ஓவைசி பல முயற்சிகளை எடுத்து வருகிறார். எனவே, ஓவைசியின் கோட்டையிலேயே அவரை வீழ்த்த மாதவி லதா என்ற பெண் வேட்பாளரை பாஜக இந்த முறை களமிறக்கியுள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தீவிரமாக இயங்கியவர் மாதவி லதா. முத்தலாக்கிற்கு எதிரான பிரச்சாரத்தில் பாஜகவின் முகமாக பார்க்கப்பட்டவர். ஹைதராபாத்தில் உள்ள விரிஞ்சி மருத்துவமனையின் தலைவராக உள்ளார். பரதநாட்டிய கலைஞரான இவர் இந்து மத சொற்பொழிவாளராகவும் உள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்:
இந்த நிலையில், ஹைதராபாத் சித்தியாம்பர் பஜார் அருகே நேற்று நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் மாதவி லதா கலந்து கொண்டார். அப்போது, அங்குள்ள மசூதியை நோக்கி அம்பு விடுவது போல மாதவி லதா பாவனை செய்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சித்தியாம்பர் பஜார் மசூதியை நோக்கி அம்பு விடுவது போன்று மாதவி லதா பாவனை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராம நவமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மாதவி லதாவின் செயலை கண்டு ஆர்ப்பரிக்கின்றனர். இந்த காட்சிகள் அமைத்தும் வைரலாகும் வீடியோவில் பதிவாகியுள்ளன.
மாதவி லதாவின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவருக்கு எதிராக வழக்குகள் ஏதேனும் பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. இதேபோன்று, நேற்று நடந்த ராம நவமி ஊர்வலத்தில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கும் சர்ச்சை செயலில் ஈடுபட்டார்.
வெறுப்பை தூண்டும் விதமாக பேசிய அவர், "பாபர் மசூதி இடிப்பு குறித்து இளைய தலைமுறையினருக்கு தொடர்ந்து கூறி வருகிறார் அக்பருதீன் ஓவைசி. சொல்லுங்களேன். இளைஞர்களுக்கு கரசேவை கற்பித்துக் கொண்டே இருப்போம். இந்தியாவில் 40,000 மசூதிகள் கோயில்களால் கட்டப்பட்டுள்ளன. காசி, மதுரா மற்றும் அனைத்து கோவில்களையும் மீட்போம்" என்றார்.