Telangana Young Scientist Dead: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள கங்காரம் தாண்டா பகுதியைச் சேர்ந்த நுனாவத் மோதிலால் மற்றும் அவரது மகள் அஸ்வினி ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு  நேற்று சென்று கொண்டிருந்தனர்.


26 வயதான அஸ்வினி, ராய்ப்பூரில் உள்ள ICAR - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் ஸ்கூல் ஆஃப் க்ராப் ரெசிஸ்டன்ஸ் சிஸ்டம் ரிசர்ச்-ல் விஞ்ஞானியாக இருக்கிறார்.


இளம் விஞ்ஞானி மற்றும் அவரது தந்தை ராய்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்தனர். தற்போது , தெலங்கானாவில் கனமழையானது பெய்து வருகிறது.


இந்நிலையில், அவர்கள் பயணித்த கார் நீர் ஓடையின் பாலத்தின் மேல் எழுந்த வந்த வெள்ளத்தில்,சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


உடல் மீட்பு:


இதையடுத்து, தகவல் கிடைத்ததும் மரிபீடா சர்க்கிள் காவல் ஆய்வாளர் எஸ்.ராஜுகுமார், உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அஸ்வினியின் உடலைக் கண்டுபிடித்த குழுவினர், அவரது தந்தையைத் தேடி வந்தனர்.   


அஸ்வினியின் உடல் மதியம் அக்கேரு வாகுவில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மஹபூபாபாத் அரசு மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டதாகவும், மாலையில் மோதிலாலின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது.


சிதைந்த கனவு:


அஸ்வினி ஒரு சிறந்த வேளாண் விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டார், ஆனால் எதிர்பாராத விதமாக, திடீரென்று உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், கடற்படையில் பணிபுரியும் அண்ணனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கங்காராம் தாண்டாவுக்கு வியாழக்கிழமை வந்தார். மோதிலாலின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தை சிறப்பாக கொண்டாடினர்.


இளம் விஞ்ஞானி:


அஸ்வரப்பேட்டை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி (வேளாண்மை) படித்த அஸ்வினி, படிப்பில் சிறந்து விளங்கியதற்காக தங்கப் பதக்கம் வென்றார். ஆரம்பத்தில் அவர் ஹைதராபாத்தில் பணிபுரிந்தார், அதற்கு முன்பு அவர் புது டெல்லிக்கும் அங்கிருந்து சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கும் மாற்றப்பட்டார்.


உள்ளூர்வாசிகள் கூற்றுப்படி, அஸ்வினி ஒரு சிறந்த மாணவி மற்றும் ஒரு நாள் சிறந்த விஞ்ஞானியாகி தனது கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். மோதிலாலின் நண்பரான பன்சிலால் தெரிவிக்கையில், அவரது மரணம் கிராமத்திற்கே பெரும் இழப்பு என்றார். அஸ்வினி தனது இலக்கில் கவனம் செலுத்துவதற்காக தனது திருமணத்தை ஒத்திவைத்தார் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.


இந்நிலையில், இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Sivaganga crime ; சந்தோஷமாக, சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை, பழைய பகை காரணமா?