இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளாக கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது.


தெலங்கானா மீது குறிவைக்கும் பாஜக:


தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைத்திராத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. அதேபோல, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்தான்.


இதன் காரணமாக, இழந்த செல்வாக்கை தெலங்கானாவில் மீற்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இப்படியிருக்க, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் சந்திரசேகர் ராவ், பல சமூக நல திட்டங்களை அறிவித்து வருகிறார்.


அதேபோல, தெலங்கானாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இச்சூழலில், தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெலங்கானாவில் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?


இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 48 முதல் 60 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, பிஆர்எஸ், 43 முதல் 55 தொகுதிகளிலும் பாஜக, 5 முதல் 11 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
வரவிருக்கும் தேர்தலில் 39 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிஆர்எஸ் 37 சதவிகித வாக்குகளையும் பாஜக 16 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


இன்னும் 6 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானாவில் இருக்கும் 17 தொகுதிகள் பிஆர்எஸ்-க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தெலங்கானாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் பெரிய வெற்றியை பிஆர்எஸ் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்