Five State Elections: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 23ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 2ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 2ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 23ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.


இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "கடந்த 40 நாட்களில் 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளுடன் கலந்துரையாடினோம். மிசோரத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சத்தீஸ்கரில் 2.03 கோடி வாக்காளர்களும் மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்களும் தெலங்கானாவில் 3.17 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.


5 மாநில தேர்தல்களில் சுமார் 60 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) பங்கேற்பார்கள். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2900க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். 17,734 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 621 வாக்குச் சாவடிகள் பொதுப்பணித்துறை ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். மகளிர் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பில் 8,192 வாக்குச் சாவடிகள் இருக்கும். 


ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்காக, 679 சட்டப்பேரவை தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். ஐந்து மாநிலங்களின் எல்லைகளில் 940க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக பணம் கடத்தப்படுகிறதா, மதுபானம், இலவசங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்படும்" என்றார்.


சத்தீஸ்கர்:


நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.


மத்திய பிரதேசம்:


பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதிலும், அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 15 மாதங்களில் கவிழ்ந்து பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.


ராஜஸ்தான்:


ராஜஸ்தானை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த கட்சி தேர்தலில் வென்றதில்லை. தற்போது, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 200 தொகுதிகளில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 73 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.


தெலங்கானா:


கடந்த 2014ஆம் ஆண்டு, புது மாநிலமாக உருவான தெலங்கானாவில் கடந்த 9 ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கவனம் செலுத்தி வரும் பாஜக, தெலங்கானாவில் கணிசமான அளவில் வெற்றியை ஈட்ட முயற்சித்து வருகிறது. அதேபோல, இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


மிசோரம்:


வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் தற்போது மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 37.7 சதவிகித வாக்குகளை பெற்று 26 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 29.98 சதவிகித வாக்குகளுடன் 5 இடங்களை கைப்பற்றி இருந்தது.