தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே விமானத்தில் கிருபானந்த் திரிபாதி உஜேலா என்ற 1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும் பயணம் செய்துகொண்டிருந்தார். கிருபானந்த் திரிபாதி தற்போது கூடுதல் டிஜிபியாக ஆந்திரபிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது க்ரிபானந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விமானத்தில் பயணம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் அவரை பரிசோதித்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஹைதராபாத்தில் தரையிறங்கியதும் டிஜிபி க்ரிபானந்த் நேரடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது ரத்தத்தில் உள்ள திசுக்களின் எண்ணிக்கை 14,000க்கு குறைந்திருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிஜிபி க்ரிபானந்த் “தெலங்கானா ஆளுநர் என் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர் ஒரு தாய் போல எனக்கு உதவினார். இல்லையென்றால் என்னால் மருத்துவமனைக்குச் சென்றிருக்க முடியாது. ஆளுநர் என்னை பரிசோதித்தபோது எனது இதயத்துடிப்பின் அளவு 39 தான் இருந்தது. அவர் எனக்கு முதலுதவி அளித்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவினார். அது எனது மூச்சை சரிசெய்தது. ஆளுநர் அந்த விமானத்தில் இல்லாமல் போயிருந்தால் என்னால் முடிந்திருக்காது. எனக்கு புதிய வாழ்க்கையை ஆளுநர் கொடுத்திருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள தமிழிசை சவுந்தர ராஜன், “விமானம் நடுவானி சென்று கொண்டிருந்தபோது, மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று விமானப் பணிப்பெண் பயத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொது தமிழிசை சவுந்தரராஜன் எழுந்து முன்னே விரைந்துச் சென்று, சுவாசிக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த நபரைப் பார்த்து அவருக்கு சிகிச்சையளித்தார்”
“அவரை படுக்கவைத்து அவருக்கு தேவையான முதலுதவி அளித்ததோடு, மருந்துகளையும் கொடுத்தார். அந்த நபரின் முகத்திலும் மற்ற பயணிகள் முகத்திலும் புன்னகையை பார்க்கமுடிந்தது. ஹைதராபாத் வந்ததும் அந்த நபர் வீல் சேர் மூலம் விமான நிலைய மருத்துவ அறைக்குக் கொண்டுச்செல்லப்பட்டார். சரியான நேரத்தில் உதவி கோரிய இண்டிகோ விமானப் பணிப்பெண்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
விமானத்தில் டிஜிபிக்கு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிகிச்சை அளித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.