கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் ஆப் மூலம் கடன் பெறும் நபர்களிடமிருந்து கடன் கொடுத்தோர் அதிக தொகையை கேட்டு தொந்தரவு செய்து வருவதாக அதிக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், இதிலும் சில மோசடியும் அவ்வப்போது அரங்கேறியும் வருகிறது. மொபைல் ஆப் மூலம் கடன் பெற பயனாளர்கள் முயற்சித்து வேண்டாம் என்று வெளியேறினாலும் அவர்கள் கடன் வாங்கியதாகவே காட்டப்படுகிறது என்றும், அதற்கான தொகையை கேட்டு போன் வருவதாகவும் கிரைம் துறை காவல்துறைக்கு புகார்கள் குவிக்கின்றனர். இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் புகைப்படத்தை வெறுப்புக்குரிய, ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் மோசடி கும்பல் ஒன்று புகைப்படங்களை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
பாஜகவின் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவராக இருந்தவர் 43 வயதான டெல்லி கோபி. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் டெல்லி கோபி கடந்த மாதம் 4-ஆம் தேதி ராயல் கேஷ் ஆப் என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ. 5 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அந்த கடனுடைய தேதி நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
கோபி கடன் தொகையை கட்ட ஒருநாள் தாமதமான நிலையில் அவரது மொபைலை அந்த நிறுவனம் ஹேக் செய்துள்ளது. தொடர்ந்து அந்த மொபைலில் இருந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, டெல்லி தேடப்படும் குற்றவாளி என்று குறிப்பிட்டு, அவரது மொபைலில் இருந்த அனைத்து காண்டெக்ட் எண்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோபி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட லோன் மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.