தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து, டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். திகார் சிறையில் கவிதா மயங்கி விழுந்ததையடுத்து, சிறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு தகுந்த மருத்துவ உதவிக்காக அனுப்பி வைத்தனர்.


கடந்த மார்ச் மாதம் 15ஆம் கைது செய்யப்பட்டவர் அன்றிலிருந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை முதலில் பதிவு செய்து விசாரணை நடத்தியது சிபிஐ தான். பின்னர், சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் விரிவான விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது.


கடந்த மார்ச் 15 ஆம் தேதி, கவிதாவை ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்து திகார் சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை.


கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு கவிதாவின் சகோதரர் கே.டி.ராமராவ், உறுவினர் டி.ஹரீஷ் ராவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கவிதாவை சிறையில் சந்தித்தனர். சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இந்த சந்திப்பு நடந்தது.


முன்னாள் அமைச்சர்களான பி. சபிதா இந்திரா ரெட்டி, சத்தியவதி ரத்தோட் ஆகியோர் கவிதாவை சில வாரங்களுக்கு முன்பு சிறையில் சந்தித்து பேசினர்.