சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வந்த ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கடந்த ஜூலை 11ஆம் தேதி கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோடீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரைத்தது.


கொலிஜியம் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்துள்ளார். இதன் மூலம், 34 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் செயல்பட உள்ளது.


தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த நீதிபதி மகாதேவன்: கடந்த 1963ஆம் ஆண்டு, ஜூன் 10ஆம் தேதி பிறந்த ஆர். மகாதேவன், கடந்த 1989ஆம் ஆண்டு, சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்த கையோடு தமிழ்நாடு பார் கவுன்சிலில் இணைந்தார். கிட்டத்தட்ட 24ஆம் ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.


தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் (வரிகள்), மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.


கடந்த 2015ஆம் ஆண்டு, நிரந்தர நீதிபதியாகவும் 2024ஆம் ஆண்டு, மே 24ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.


கோயில் சொத்துகளை மீட்டெடுப்பதில் அதிரடி காட்டிய நீதிபதி:


குறிப்பாக, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய தளங்களையும் கோயில்களையும் பண்டைய நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்க அவர் பிறப்பித்த உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன.


தெலுங்குக்கு வழங்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து செல்லும் என கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று அவர் வழங்கிய தீர்ப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது.


ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் சொத்துக்களை மீட்டெடுப்பதில் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதியாக பதவி வகிக்கும்போது, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை, பள்ளி பாடத்திட்டங்களில் திருக்குறளை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.


மணிப்பூர் மாநிலத்தின் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள மற்றொருவர் கோடீஸ்வர் சிங். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.


கடந்த 2013 ஆம் ஆண்டு, மணிப்பூர் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டபோது, அதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.