தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் தேர்தல்:


நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஆந்திராவில் இருந்து பிரிந்து உருவான தெலங்கானாவும் ஒன்று. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தான் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த முறை அங்கு தேர்தலில் வென்று ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரமாக களமாடி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், தற்போதே மாநிலத்தில் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


”தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய விருப்பம்”


தேர்தலை முன்னிட்டு ஐதராபாத் அருகே உள்ள துக்குகூடா எனும் பகுதியில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணிபுரியும் காங்கிரஸ் ஆட்சி தெலங்கானாவில் அமைய வேண்டும் என்பது எனது கனவு. நீங்கள் எங்களை ஆதரிப்பீர்களா?  மாநிலத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துவது நமது கடமை” என பேசினார். தொடர்ந்து, தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள சந்திரசேகர் ராவ் தலைமையிலான  பாரத் ராஷ்டா சமிதி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் கடுமையாக சாடினார்.






ஆறு உறுதிமொழிகள்:


தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, “நாங்கள் இப்போது ஆறு உத்தரவாதங்களை அறிவிக்கிறோம். அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என தெரிவித்தார். அதன்படி, மஹாலட்சுமி, ரைது பரோசா, க்ருஹ ஜோதி, இந்திரம்மா இன்லு, யுவ விகாசம் மற்றும் செயுதா எனும் ஆறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி, 



  • மகாலட்சுமி என்ற திட்டத்தின் பேரில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்

  • சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும்

  • அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

  • வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையோடு ரூ. 5 லட்சம் 

  • தெலங்கானா மாநிலம் உருவாவதற்கான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு 250 ச.அ வீடு கட்டி தரப்படும்

  • அனைத்து இல்லங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்

  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை

  • விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,00 உதவித்தொகை

  • பயிர் அறுவடைக்கு ரூ.500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்

  • மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான வித்யா பரோசா அட்டை வழங்கப்படும்

  • முதியோர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4000 வழங்கப்படும்

  • ராஜீவ் ஆரோக்யஸ்ரீ எனும் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டம் முதியோர்களுக்கு ஏற்படுத்தப்படும்