பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
ஒட்டு மொத்த மாநிலத்தின் கவனத்தை பெற்ற கமாரெட்டி தொகுதி:
ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, 35 இடங்களிலும் பாஜக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மீதமுள்ள தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி உறுதியாகிவிட்டது. பிரதான எதிர்க்கட்சியாக பாரத் ராஷ்டிர சமிதி உருவெடுத்துள்ளது.
ஆனால், ஒட்டு மொத்த மாநிலத்தையே பாஜக வேட்பாளர் ஒருவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கமாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட கட்டிப்பள்ளி வெங்கட ரமணா. இந்த தேர்தலில், அதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இது மாறியுள்ளது. ஏன் என்றால், தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரசேகர் ராவ், அடுத்த முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ள ரேவந்த் ரெட்டி ஆகிய இரண்டு பேரையும் தோற்கடித்துள்ளார் வெங்கட ரமணா.
சந்திரசேகர் ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரும் இரு தொகுதிகளில் களமிறங்கினர். சந்திரசேகர் ராவ், தன்னுடைய பாரம்பரிய தொகுதியான கஜ்வெலிலும் ரேவந்த் ரெட்டி, தன்னுடைய கோட்டையாக கருதப்படும் கோடங்கல் தொகுதியிலும் போட்டியிட்டனர். இதை தவிர்த்து இருவரும் குறிவைத்த தொகுதிதான் கமாரெட்டி.
கே.சி.ஆர், ரேவந்த் ரெட்டிக்கு தண்ணிகாட்டும் பாஜக வேட்பாளர்:
பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் கமாரெட்டியில் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கோவர்தன். இவருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அந்த தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர் ராவ் அறிவித்தார். இதை தொடர்ந்து, கமாரெட்டி தொகுதியில் தானும் போட்டியிட உள்ளதாக ரேவந்த் ரெட்டி களமிறங்கினார்.
இருவருக்கும் சவால் தரும் வகையில் பாஜகவின் வெங்கட ரமணா பிரச்சாரம் மேற்கொண்டார். உள்ளூர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் அவர் பரப்புரை செய்தார். இதனால், மாநிலத்தின் மொத்த கவனமும் கமாரெட்டி மீது திரும்பியது. அனைவரும் எதிர்பார்த்தபடி, தற்போது அங்கு மும்முனை போட்டி நிலவியது.
ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி என இரண்டையும் பின்னுக்கு தள்ளி வெங்கட ரமணா வெற்றிபெற்றுள்ளார். அவர் 66652 வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள சந்திரசேகர் ராவ், 59911 வாக்குகளை பெற்றுள்ளார். ரேவந்த் ரெட்டி 54916 வாக்குகளை பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: Election Results 2023 LIVE: மூன்று மாநிலங்களை தட்டி தூக்கிய பாஜக.. காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலாக மாறிய தெலங்கானா