பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 119 தொகுதிகளில் 64 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 


தேர்தல் களத்தில் அசத்துவாரா முகமது அசாருதீன்?


ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, 40 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மீதமுள்ள தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி உறுதியாகிவிட்டாலும், அதன் நட்சத்திர வேட்பாளர் ஒருவர் கடும் போட்டியை சந்தித்து வருகிறார்.


அவர் வேறு யாரும் அல்ல. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். ஹைதராபாத் நகரில் பிறந்தவர். தற்போது, அதே ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் களம் கண்டார். ஒரு காலத்தில், பேட்டிங்கில் இந்திய அணியின் தூணாக இருந்தவர்.


99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,215 ரன்களை குவித்தார். 334 ஒருநாள் போட்டியில் விளையாடி 9378 ரன்களை எடுத்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் கலக்கியது போல் தேர்தல் களத்திலும் அசத்துவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர்.


கடும் போட்டியை சந்திக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்:


ஆனால், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மகந்தி கோபிநாத் முன்னிலை வகித்து வருகிறார். 10ஆவது சுற்றின் முடிவின்படி, முகமது அசாருதீனை விட 1,648 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இன்னும், 16 சுற்றுகள் பாக்கி இருக்கும் நிலையில், அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். ஆனால், கடந்த 2014 பொதுத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் - சவாய் மாதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


கடந்த 10 ஆண்டுகளில், காங்கிரஸ் பல தோல்விகளை சந்தித்த போதிலும், கட்சிக்கு விசுவாசமாகவே இருந்து வந்தார் முகமது அசாருதீன். இதன் காரணமாக, கடந்த 2018ஆம் ஆண்டு, மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.                                            


இதையும் படிக்க: Election Results 2023 LIVE: ஆட்சி மாறுவதால் தெலங்கானாவில் காட்சி மாற்றம் - காங்., தலைவரை சந்தித்த காவல்துறை டிஜிபி