தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. வரும் 7ஆம் தேதி (நாளை மறுநாள்) அவர் முதலமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் தெலங்கானாதான். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தெலங்கானாவில் மட்டும் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலாக அமைந்த தெலங்கானா:
மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பானமைக்கு தேவையானதை விட அதிகமாக, அதாவது மொத்தமாக 64 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் உத்வேகத்தில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்படுகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, கடந்த 2021ம் ஆண்டு முதல் அக்கட்சியின் மாநில தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர் மேற்கொண்ட பரப்புரையும், கட்சியை வலுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளும் தான் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறி வந்தனர். இருப்பினும், அவரை முதலமைச்சராக அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது.
தலித் சமூகத்தை சேர்ந்த பத்தி விக்ரமார்கா, தெலங்கானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியானது.
முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி:
இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அவர் பேசுகையில், "தெலங்கானா காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி அவர் பதவியேற்பார்" என்றார்.
முதலமைச்சரை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், ராகுல் காந்தி தலையீட்டுதான் பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
அனுமுலா ரேவந்த் ரெட்டி 1967 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அம்மாநிலத்தில் உள்ள மஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டரெட்டி பள்ளியில் பிறந்தவர். இவர் மாணவராக இருந்தபோது இந்துத்துவா அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி யில் உறுப்பினராக இருந்தார். தீவிர பாஜக சிந்தனையாளரான ரேவந்த் ரெட்டி சுயேட்சையாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல கட்சிகளுக்கு சென்றாலும், ரேவந்த் ரெட்டி மீது காங்கிரஸ் கட்சி அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தது. 2018 ஆம் ஆண்டு தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும் ரேவந்த் ரெட்டி 2019 பொதுத் தேர்தலில் மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற 2023 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.