மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அசுர வெற்றியை பதிவு செய்துள்ளது.


மத்திய பிரதேச அரசியலில் தொடரும் சஸ்பென்ஸ்:


மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதலமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக முதலமைச்சர் பொறுப்பு வகித்து வரும் சிவராஜ் சிங் சவுகான், முதலமைச்சராக நீடிப்பாரா அல்லது வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.


முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக தேர்தலை சந்தித்தது. தேர்தலில், மூன்று மத்திய அமைச்சர்கள் உள்பட 7 எம்பிக்களை பாஜக களம் இறக்கியது. இதன் மூலம், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஓரங்கட்டப்படுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.


ஆனால், மக்கள் மத்தியில் சிவராஜ் சிங் சவுகானுக்கு இருந்த செல்வாக்கு பாஜகவின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அவருக்கு முதலமைச்சர் பதவி தருவதில் கட்சி மேலிடம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர்களில் எவரேனும் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படும் எனக் கூறப்படுகிறது.


பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி?


மாநிலத்தின் மக்கள தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் சிங் படேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவிய சந்தியாவுக்கு முதலமைச்சர் பதவியை தருவது மாநில தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


அதேபோல, பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


அந்த வகையில், மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி.சர்மா, ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினரும் தற்போதைய அமைச்சரவையில் பொது தகவல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜேந்திர சுக்லா ஆகிய இருவரில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


வரவிருக்கும் மக்களவை தேர்தல் வரை,  சிவராஜ் சிங் சவுகானே முதலமைச்சராக தொடர்வார் என்ற பேச்சும் கட்சி வட்டாரங்களில் அடிபடுகிறது. ஆனால், டெல்லி தலைமையே இதுகுறித்த முடிவு எடுக்கும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.