பத்மஸ்ரீ விருது பெற்ற தெலங்கானாவின் டோல் இசைக் கலைஞர் சக்கினி ராமச்சந்திரய்யாவுக்கு வீட்டுக்கான நிலமும், அதில் வீடு கட்டுவதற்கான ஒரு கோடி ரூபாய் பண உதவியும் வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 


இன்று தெலங்கானாவின் பிரகதி பவனில் சக்கினி ராமச்சந்திரய்யாவை சந்தித்த சந்திரசேகர ராவ், அந்த மாநிலத்தின் பூர்வகுடி கலையை இதுநாள் வரை பாதுகாத்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.


ராமச்சந்திரய்யா வசிக்கும் பினபாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரேக காந்த ராவை சந்தித்த சந்திரசேகர ராவ், ராமச்சந்திரய்யாவின் வீடு கட்டுவதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்து ஆவண செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


குடியரசு தினத்தன்று வழங்கப்பட்ட 128 பத்ம விருதுகளில் 5 விருதுகள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.






இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகள் பத்ம விருதுகள். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், எந்த துறையிலும் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. 


இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


1972ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை கரக்பூர் ஐஐடியில் உலோக பொறியியலில் பட்டம் பெற்றார். அதனையடுத்து அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்த சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனையடுத்து தன் உழைப்பாலும், திறமையாலும் அந்நிறுவனத்தின் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டார்.