தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வயிற்றில் உபாதை:


சந்திரசேகர் ராவுக்கு  எதிர்பாராதவிதமாக வயிற்றில் உபாதை ஏற்பட்டதையடுத்து, இன்று காலை கச்சிபௌலியில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ஏஐஜி) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 


அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் வயிற்றில் புண் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஏஐஜி மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான நாகேஷ்வர் ரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார்.


மருத்துவமனை அறிக்கை:


இச்சூழலில், கேசிஆரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்று வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி அவரை பரிசோதித்தார். 


அவர் AIG மருத்துவமனைக்கு கொண்டு வரபட்டு CT ஸ்கேனும் எண்டோஸ்கோபியும் செய்யப்பட்டது. அதில், அவரின் வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது. அதற்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் அளவுருக்கள் இயல்பாக உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.


யார் இந்த கே.சி.ஆர்?


நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே. சந்திரசேகர் ராவ். ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக தெலங்கானாவைப் பிரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர் கேசிஆர்.


நாடாளுமன்றத்தில் தெலங்கானா தனி மாநிலத்திற்கான மசோதா நிறைவேறியதும், தன் கட்சியை முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்து, தேர்தலுக்கான தயாரானார்.


அடுத்த சில மாதங்களிலேயே நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சஹராக பதவியேற்றார். தற்போது இரண்டாவது முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.



குருவை எதிர்த்து போட்டியிட்ட சிஷ்யன்:




காங்கிரஸ் தலைவர் மதன்மோகனிடம் அரசியல் கற்றுக்கொண்ட கே.சி.ஆர், 1983ஆம் ஆண்டு தெலுங்குதேசம் தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார். தன் அரசியல் குருவான மதன் மோகனை எதிர்த்து சித்திபேட்டை தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 






கடந்த 1985ஆம் முதல் முறையாக ஆந்திர சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1997ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தார். 1999 தேர்தலில் துணை சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு அளிக்க முன்வந்த போதிலும், கே.சி.ஆர் அதை விரும்பவில்லை. 






கடந்த 2000ஆம் ஆண்டில் தெலங்கானா தனி மாநில கோரிக்கையுடன் டி.ஆர்.எஸ். கட்சியைத் தொடங்கிய கே.சி.ஆர், 14 ஆண்டுகள் கழித்து, தனி மாநிலம் உருவாகி, முதல் தேர்தலில் வெற்றிபெற்றதுடன், தற்போது இரண்டாவது முறையும் வெற்றிபெற்று முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார்.