கடந்த சில மாதங்களாகவே, விமானங்களில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.
சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி இல்லை:
இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. லண்டனில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் அமெரிக்கர் ஒருவர் புகைபிடித்துள்ளார்.
புகை பிடித்தது மட்டும் இன்றி, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட நபரான ரமாகாந்த் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பறக்கும் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து விவரித்துள்ள மும்பை காவல்துறை, "இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 (மனித உயிருக்கு அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது) மற்றும் விமானச் சட்டம் 1937, 22 (சட்டப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற மறுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
விமானத்தில் பரபரப்பு:
காவல் நிலையத்தில் ஏர் இந்தியா விமான அதிகாரி அளித்த புகாரில், "விமானத்தில் புகைபிடிக்க அனுமதி இல்லை. அவர் குளியலறைக்கு சென்றதும் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. நாங்கள் அனைவரும் குளியலறையை நோக்கி ஓடியபோது அவர் கையில் சிகரெட் இருப்பதைக் கண்டோம். உடனே அவர் கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தோம்.
அப்போது ரமாகாந்த் எங்கள் குழுவினரை நோக்கி கத்த ஆரம்பித்தார். எப்படியோ அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றார். அவரது நடத்தையால் பயணிகள் அனைவரும் பயந்து, அவரை இயல்புக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.
அவர் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை, கத்திக் கொண்டிருந்தார். பிறகு அவரது கை, கால்களை கட்டி இருக்கையில் அமர வைத்தோம். குற்றம் சாட்டப்பட்ட பயணி நிற்காமல் தலையில் அடித்துக் கொண்டார்.
பயணிகளில் ஒருவர் மருத்துவர். அவர் வந்து அவரைப் பரிசோதித்தார். அப்போது ரமாகாந்த் தனது பையில் மருந்து இருப்பதாகக் கூறினார். ஆனால், எங்களிடம் எதுவும் கிடைக்கவில்லை. பையை சோதனை செய்தபோது ஒரு இ-சிகரெட் மீட்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், பயணி ராம்காந்த் சஹார் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.