ஆளுநர் தமிழிசை உடனான மோதலால் குடியரசு தினவிழாவில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், இதற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
குடியரசு தின விழாவை பொறுத்தவரை டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். ஆளுநர் தமிழிசை கொடி ஏற்றுவதற்கு முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் பலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தர்பார் அரங்கின் முன் தேசிய கொடியை ஏற்றி பறக்கவிட்டார்.
இந்தநிலையில், குடியரசு தின விழா நிகழ்வின் போது அம்மாநில முதலமைச்சர் சந்திரகேகர ராவ் புறக்கணித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திர சேகர ராவுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாகவே அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் குடியரசு தின விழாவை புறக்கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு பயணம் செய்தபோது அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், அவரை வரவேற்காமல் புறக்கணித்தார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் தற்போது நீடித்து வருகிறது. தெலுங்கானாவில் கொடி ஏற்றியதற்கு பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி சென்று அங்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்ற இருக்கிறார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழிசை சௌந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டு இருந்தார். அதில், ”நம் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன்.” என பதிவிட்டு இருந்தார்.