தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் ஒரு கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின்னர் அவர் வெளியே வந்த போது அவருடைய காலணியை பாஜகவின் தெலங்கானா மாநிலத் தலைவர் ஒருவர் எடுத்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. 


இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியினர் வேகமாக வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவர் கிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தெலங்கானாவிற்கு சுயமரியாதை உள்ளதா? இல்லையா? என்று கூறி இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். 






இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் ஒய்.சதீஷ் ரெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அமித்ஷாவிற்கு காலணியை எடுத்து கொடுக்க வேகமாக செல்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.






இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பாஜக தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் தெலங்கானா மாநிலத்திற்கு படை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது அமித் ஷா அங்கு பயணம் செய்துள்ளார். 


தெலங்கானாவிலுள்ள நால்கொண்டா பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நடிகரும் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்தார். அவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


தெலுங்கானா மாநிலம் முனுகோட் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து முனுகோட் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். மீண்டும் ராஜகோபாலே போட்டியிட உள்ளதாகவும், ஆனால் பாஜக சார்பில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தெலங்கான மாநிலத்தில் 118 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் டிஆர்.எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.