தெலங்கானா மாநிலத்தின் ஹைதரபாத்தில் அமைந்துள்ளது வாரங்கல்- காசிபேட் பகுதி. இங்கு ரயில்வே காலனி உள்ளது. இந்த காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சாலையோரங்களில் சிறு, சிறு பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு 7 வயதில் சோட்டு என்ற ஒரு மகன் உள்ளார்.


நாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு:


இந்த நிலையில், சோட்டு அந்த பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த பூங்காவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று சோட்டு மீது பாய்ந்து சரமாரியாக கடித்து குதறியது. குறிப்பாக, சிறுவன் சோட்டுவின் கழுத்தில் அந்த நாய் கடித்ததில், சோட்டுவிற்கு ஏராளமான ரத்தம் உடலில் இருந்து வெளியேறியது. உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்த சோட்டுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


ஆனாலும், சிறுவன் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியிருந்ததால் சோட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தான். வடமாநிலத்தில் இருந்து வியாபாரத்திற்கு வந்த நபரின் மகன் தெருநாய் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அதிகரிக்கும் அட்டகாசம்:


இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வாரங்கல் மேற்கு எம்.எல்.ஏ. தசயம் வினய் பாஸ்கர், நகர மேயர் பிரகாஷ்ராவ் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் இழப்பீடும் வழங்கினர்.


நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, பிட்புல் எனப்படும் நாய் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தெலங்கானாவின் ஹனுமகொண்டா மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தெருநாய் கடி சம்பவங்கள் 29 முறை அரங்கேறியுள்ளது. ஹைதரபாத்தின் ஆம்பர்பேட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 5 வயது சிறுவன் தெருநாய் கடித்து உயிரிழந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் தெருநாய்க்கடி சம்பவத்தால் பலரும் அடிக்கடி பாதிக்கப்படுவதால், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


நாய்களுக்கு உணவளிப்பவர்கள் நாய்களைத் தத்தெடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நவம்பர் மாதம் நிறுத்தி வைத்தது. நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடிய பகுதிகளை வரையறுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: PUBG Game: இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு.. அம்சங்கள் என்ன?


மேலும் படிக்க: 10th Result District Wise: ’படிப்பே எங்கள் மூச்சு’ .. 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?