ஒரு மனிதன் மிகச்சிறந்த மனிதனாக, மிகச்சிறந்த குடிமகனாக இருப்பதற்கு அவனது தந்தை, தாயின் பங்களிப்பை காட்டிலும் அவனை வழிகாட்டும் அவனது ஆசிரியரின் பங்களிப்பே மிக மிக முக்கிய காரணம் ஆகும். படிக்கும் மாணவனாக மட்டுமின்றி நாம் எந்த தொழில் செய்தாலும் நமக்கு சிறந்த குருநாதர் இருக்க வேண்டும்.


ஆசிரியர் தினம்


இல்லாவிட்டால் அந்த துறையில் நம்முடைய பயணம் சரியான இலக்கைச் சென்று அடையாது என்பதே உண்மை. அப்பேற்பட்ட ஆசிரியர்களை நாம் உண்மையாக மதித்தாலே நாம் சிறப்பானவர்களாக திகழ முடியும். அதற்கு பலரை நாம் உதாரணமாக கூறலாம்.




ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது மிக அவசியம். அந்த கல்வியை அவனை பண்பட்ட மனிதனாக மாற்ற சிறந்த ஆசிரியர் அதை போதிக்க வேண்டியது மிக மிக அவசியம். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா இன்று இந்தளவிற்கு சிறந்திருப்பதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அப்பேற்பட்ட ஆசிரியர்களின் மாண்பை போற்றும் விதமாக ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்த முதல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.


மைசூர் - கல்கத்தா


ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக எப்போதும் இருக்கும், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த ராதாகிருஷ்ணனுக்கு மாணவர்கள் அளித்த மறக்க முடியாத கவுரவத்தை கட்டாயம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தத்துவ பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன்  சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார்.


1918ம் ஆண்டு அவரது திறமைக்கு அங்கீகாரமாக மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடம் நடத்தும் விதத்தால் மாணவர்கள் பலரும் அவர் மீது தனி மரியாதை கொண்டிருந்தனர். அப்போது, 1921ம் ஆண்டு அவருக்கு புகழ்பெற்ற கொல்கத்தா பல்கலைகழகத்தில் பணியாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.


மாணவர்கள் அளித்த அங்கீகாரம்:




மைசூர் பல்கலைகழகத்தில் இருந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு ராதாகிருஷ்ணன் செல்கிறார் என்ற செய்தி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. உரிய மரியாதையுடன் அவருக்கு பிரிவு உபச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா முடிந்த பிறகு மைசூர் பல்கலைகழகத்தில் இருந்து அவர் கொல்கத்தா பல்கலைகழகம் செல்வதற்கு குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஆனால், ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விதமாக குதிரை வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு மாணவர்களே தங்களது ஆசிரியரான ராதாகிருஷ்ணனை அதில் அமரவைத்து அவரை ரயில் நிலையம் வரை இழுத்துச் சென்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்ற வார்த்தையை உண்மையாக்கியவர் ராதாகிருஷ்ணன் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சான்றாகும்.


இவரது தத்துவ அறிவிற்காக இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றினார். இவரது தத்துவ அறிவிற்காகவும், இவரது ஆசிரிய பணியை பாராட்டும் விதமாக சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் என்ற அங்கீகாரம் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆசிரியர் பணிபுரியும் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் டாக்டர் ராதாகிருஷ்ணன் 1975ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி இயற்கை எய்தினார்.