பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே கடந்து செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


பஞ்சாபில் அதிர்ச்சி:


சமீப காலமாக, பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக ஆசிரியர்களே நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பஞ்சாபில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப், கோபிந்த்புரா மொஹல்லா பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலை ஸ்மார்ட் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வகுப்பறையிலயே ஆபாச வீடியோக்கள் காட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் பெயர் ராஜீவ்சர்மா. இவர் பணிபுரிந்து வரும் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தை அளிக்க புகாரின் பேரில் ராஜீவ் கைது செய்யப்பட்டார்.


வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, எல்சிடி திரையில் 6ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் ராஜீவ் மீது புகார் அளிக்கப்பட்டது.


வகுப்பறையில் ஆசிரியர் செய்த காரியம்:


இதுகுறித்து சத்னாம்புரா காவல்துறை அதிகாரி கூறுகையில், "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்றார்.


சமூகத்தில், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இம்மாதிரியான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடல் ரீதியாக மட்டும் இன்றி, உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் மனதில் இது வடுவாக மாறிவிடுகின்றன. 


பாலியல் தொல்லை:


இதுபோன்று, அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இரண்டே நாள்களில், ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த காரணத்தால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.


மூன்றாம் நிலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக டான்வில்லியைச் சேர்ந்த 38 வயதான எலன் ஷெல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 16 வயது மாணவர்களுடன் மூன்று முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கரார்ட் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஷெல் மீது வழக்கு தொடரப்பட்டது.


சிறுமிகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களேயே நடப்பதாக ஐநா சமீபத்தில் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.