Summer : மே மாதத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை அதிகளவில் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
இந்தியா முழுவதும் கோடை காலம் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கியது. அம்மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாகவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானதால் வெப்ப அலை நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
எச்சரிக்கை
இந்நிலையில், நாளை முதல் (மே மாதம்) இந்தியாவின் பல்வேறு பகுதியில் வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், கிழக்கு உத்தர பிரதேசம், ஆந்திரா, வடக்கு சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதியில் இயல்பை வட வெப்ப அலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலை இயல்பை விட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்
கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடலில் பிடிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் விற்கப்படும் மற்றும் மூடாமல் வைக்கப்படும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
TN Rain Alert: அடுத்த 3 மணிநேரம் குடையுடன் தயாரா இருங்க..! 10 மாவட்டங்களில் படையெடுக்கபோகும் மழை..!